திகிலூட்டும் வானவேடிக்கை போர்க்களம்போல் காட்சியளித்தது: ஜெர்மனியில் 19 பேர் படுகாயம்!

திகிலூட்டும் வானவேடிக்கை போர்க்களம்போல் காட்சியளித்தது: ஜெர்மனியில் 19 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் நடந்த கோலாகலமான கண்காட்சி, கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்த பூமியானது! வானை அலங்கரித்திருக்க வேண்டிய வானவேடிக்கைகள், பயங்கர சத்தத்துடன் தரையை நோக்கிப் பாய்ந்து வெடித்ததில் ஒரு குழந்தை உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த  வெள்ளிக்கிழமை இரவு ரைன் நதிக்கரையோரத்தில் நடைபெற்ற ரைன்கிர்ம்ஸ் கண்காட்சியில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விண்ணை முட்டும் வாணவேடிக்கை வெடிப்புகள், வழக்கத்திற்கு மாறாகத் தாழ்வாக வெடித்துச் சிதறியதே இந்த விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கண்காட்சிக்கு வந்திருந்த மக்கள், திடீரென வெடித்த வானவேடிக்கைக் குண்டுகளால் நிலைகுலைந்து ஓடினர். சிலர் சிதறிய வெடிமருந்துத் துகள்களாலும், தீப்பொறிகளாலும் உடல் முழுவதும் காயமடைந்தனர். கண்காட்சியே போர்க்களம்போல் காட்சியளித்தது. இந்த அதிர்ச்சி தரும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோர விபத்து, கண்காட்சிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரை அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. பாதுகாப்பற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.