ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்தப் பாடலில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடனமாடிய மலையாள நடிகர் சௌபின் ஷாஹிரின் நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது அசாத்தியமான நடனத் திறமையை பலர் பாராட்டி வரும் நிலையில், ஒரு சிலர் ‘லோகேஷ் இவரை இப்படி ஆட வைத்தார்’ என்று விமர்சித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், ‘மோனிகா’ பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றிய சான்டி மாஸ்டர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சௌபின் ஷாஹிர், சான்டி மாஸ்டருக்கு முத்தமிட்டு நன்றி தெரிவிக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவைப் பகிர்ந்த சான்டி மாஸ்டர், “மோனிகா பாடலை இவ்வளவு அன்புடன் ரசித்த அனைவருக்கும் நன்றி!!! சௌபின் ஷாஹிர் சார் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த இந்த அற்புதமான வெற்றிப் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. சௌபின் ஷாஹிர் சாரின் அற்புதமான நடிப்பை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இன்று அவரது நடனத் திறன்களை அறிந்துகொள்வது ஒரு பெரிய விஷயம்!!! மோனிகா பாடலில் நடித்த பூஜா ஹெக்டே மேடமுக்கு நன்றி. நீங்கள் ஒரு அற்புதமான ஸ்டைலான நடனக் கலைஞர். உங்களுடன் பணிபுரிந்ததில் சிறந்த அனுபவம். அனிருத் ரவிச்சந்தர் ராக்ஸ்டார். நீங்கள் மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்!! உங்களுடன் மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இறுதியாக என்னை எப்போதும் நம்பிய லோகேஷ் கனகராஜ் அய்யா பல நன்றிகள். கிரிஷ் கங்காதரன் சகோ. உங்கள் காட்சிகள் இல்லாமல், மோனிகாவுக்கு அத்தகைய நட்சத்திர அனுபவம் கிடைத்திருக்காது. உங்களுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை சன் பிக்சர்ஸுக்கும் நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர்கான், சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், அபிராமி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.