சீனாவுக்கு சிப்செட்களை விற்க நிபந்தனை: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு!

சீனாவுக்கு சிப்செட்களை விற்க நிபந்தனை: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு!

அமெரிக்காவின் முக்கிய செமிகண்டக்டர் நிறுவனங்களான Nvidia மற்றும் AMD ஆகியவை, சீனாவிற்கு செயற்கை நுண்ணறிவு சிப்செட்களை விற்பனை செய்ய, அந்நிறுவனங்களின் வருவாயில் 15 சதவீதத்தை அமெரிக்க அரசுக்கு வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இது ஒரு “முன்னுதாரணமற்ற ஒப்பந்தம்” எனத் தொழில் வல்லுநர்களால் வர்ணிக்கப்படுகிறது.

சீனாவிற்கு அதிநவீன ஏஐ சிப்செட்களை ஏற்றுமதி செய்வதற்கு ட்ரம்ப் அரசு முன்னதாக விதித்திருந்த தடையை நீக்கி, தற்போது இந்த நிபந்தனையுடன் கூடிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, Nvidia நிறுவனம் தனது H20 சிப்களையும், AMD நிறுவனம் தனது MI308 சிப்களையும் சீனாவிற்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் வருவாயில் 15 சதவீதத்தை அமெரிக்க அரசுக்கு அளிக்க வேண்டும்.

சீனாவிற்கு விற்கப்படும் இந்த சிப்செட்கள், அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு வழங்கும் சிப்களை விடத் திறன் குறைந்தவை என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் தொழில்நுட்ப மேலாதிக்கம் பாதுகாக்கப்படுவதாக அரசு வாதிடுகிறது.

Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாகவே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், அமெரிக்க நிறுவனங்கள் சீனச் சந்தையில் மீண்டும் நுழைய வழி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இந்த முடிவு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் கொள்கைகளுக்கு முரணானது என சில வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.