கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு! – ரஜினியின் ‘கூலி’ முதல்நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியீடு!
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் (ஆக.14) உலகெங்கும் வெளியானது. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விமர்சகர்கள் இது லோகேஷின் ‘மோசமான படம்’ என சாடியுள்ளனர்.
ரஜினியை முந்தினாரா விஜய்? வசூல் நிலவரம் என்ன?
உலகம் முழுவதும் முதல் நாளில் ‘கூலி’ திரைப்படம் சுமார் ரூ.130 கோடி வசூலித்துள்ளதாக ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த வசூல், தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் குவித்த ரூ.148 கோடி வசூலை முறியடிக்கவில்லை. இதனால், ‘விஜய்யை ரஜினி முந்தினாரா?’ என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?
‘கூலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமான முதல்நாள் வசூல் அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால், சமூக வலைதளங்களில் பலவிதமான தகவல்கள் பரவி வருகின்றன.
ரஜினி, சத்யராஜ், ஆமிர் கான், நாகார்ஜுனா, பூஜா ஹெக்டே, ஷ்ருதி ஹாசன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தும், கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் ‘கூலி’ திரைப்படம், வரும் நாட்களில் வசூல் ரீதியாக என்ன சாதனை படைக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது!