இசையமைப்பாளர் இளையராஜா, சோனி நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்த காப்புரிமை தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இளையராஜாவின் ஐஎம்எம்பி (IMMP) நிறுவனத்திடமிருந்து 228 ஆல்பம் பாடல்களைப் பயன்படுத்த சோனி மியூசிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், இந்த பாடல்களை மூன்றாம் தரப்பினருக்குப் பயன்படுத்த இளையராஜாவின் நிறுவனம் அனுமதி அளித்ததாக சோனி மியூசிக் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டு சோனி மியூசிக், மும்பை உயர் நீதிமன்றத்தில் இளையராஜாவுக்கு எதிராக காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்தது. இதில், சுமார் ரூ. 1.5 கோடி நஷ்டஈடு கோரப்பட்டது.
இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், ஒரே தன்மை கொண்ட வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் நடைபெறுவது முரண்பாடான தீர்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று இளையராஜா வாதிட்டார். சோனி நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா தாக்கல் செய்த காப்புரிமை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், மும்பையில் உள்ள வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இளையராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இளையராஜாவின் இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளையராஜாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம், மும்பை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கு அங்கேயே தொடர்ந்து நடைபெறும்.