தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இயக்கி வரும் “வேட்டுவம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. சண்டை பயிற்சியாளர் (ஸ்டண்ட் மாஸ்டர்) மோகன்ராஜ் (52) படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தில் “வேட்டுவம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், படப்பிடிப்பில் ஒரு முக்கிய சண்டை காட்சியில் ஈடுபட்டிருந்தார்.
படப்பிடிப்பின் போது, மோகன்ராஜ் காரில் இருந்து குதிக்கும் சாகசக் காட்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்ததும், படக்குழுவினர் மோகன்ராஜை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகன்ராஜின் திடீர் மறைவு, “வேட்டுவம்” படக்குழுவினரையும், ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாகசக் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது இந்த துயர சம்பவம். மோகன்ராஜின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.