எலும்புகள் எழுப்பும் பீதி! மேலும் 8 மண்டை ஓடுகள் செம்மணியில் கண்டுபிடிப்பு!

எலும்புகள் எழுப்பும் பீதி! மேலும் 8 மண்டை ஓடுகள் செம்மணியில் கண்டுபிடிப்பு!

செம்மணியில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் உக்கிரமடைந்துள்ளன. நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழ்வின் 17ஆம் நாள் பணியில், மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

நேற்று முன்தினம் ஏழு மண்டை ஓட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்ட நிலையில், நேற்று மேலும் எட்டு மண்டை ஓட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மொத்தமாக 15 எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுவரை, இந்த மனிதப் புதைகுழியிலிருந்து 65 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய கண்டுபிடிப்புகளுடன் சேர்த்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது!

மீட்கப்பட்ட எச்சங்களில், 6 முதல் 7 வரையிலானவை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குழந்தைகளின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு குழந்தைகள் பயன்படுத்தும் பால் போத்தலும் (புட்டி) மற்றும் சில ஆடைகளை ஒத்த துணிகளும் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள், செம்மணி மனிதப் புதைகுழியின் மர்மத்தை மேலும் ஆழப்படுத்தியுள்ளன. புதைக்கப்பட்டவர்களின் அடையாளம், மரணத்திற்கான காரணங்கள், மற்றும் இந்த கொடூர சம்பவத்திற்குப் பின்னாலுள்ளவர்கள் குறித்த கேள்விகள் எழும்பியுள்ளன. நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.