இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து அடுத்த 24 மணிநேரத்திற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மோசமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடற்பகுதிகளில் கடலலையின் உயரம் 2.5 முதல் 3 மீற்றர் வரையில் உயரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அனைவரும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.