யாழ்ப்பாணம்: மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலைப் புலிகள் பெண் போராளியின் மரணம், யாழ் மண்ணை உலுக்கியுள்ளது! கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதான சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இந்த அதிர்ச்சி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
திருமணமாகாத இவர், தனது சகோதரியுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெரும் மன விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று மதியம் உணவு அருந்திய பின்னர், யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டு, தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும், திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர், உடற்கூற்று பரிசோதனைகளுக்குப் பிறகு தவரூபியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.