Posted in

அலறவைக்கும் காலநிலை பேரழிவு! பாகிஸ்தானைக் காப்பாற்ற உலக நாடுகள் உதவ வேண்டும்

பாகிஸ்தானில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மனித குலத்திற்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது! இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள் என்பது உலக நாடுகளை உலுக்கியுள்ளது!

வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள், இடிந்து விழுந்த வீடுகள், சாலைகளில் நீந்தும் சடலங்கள் என பாகிஸ்தான் ஒரு பேரழிவு பூமியாக மாறியுள்ளது. ஜூன் 26 அன்று தொடங்கிய இந்த பெருமழை, பஞ்சாப் மாகாணத்தை புரட்டிப் போட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்படி, இதுவரை 85-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

குழந்தைகள் நீரில் மூழ்கியும், நீரினால் பரவும் நோய்களாலும் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழப்பதாக உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. பலர் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, ராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் கோர முகம் பாகிஸ்தானை கடுமையாகத் தாக்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் வடுக்கள் மறையாத நிலையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய பேரிடரை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. இது வெறும் ‘மோசமான வானிலை’ அல்ல; இது தீவிரமடைந்து வரும் காலநிலை நெருக்கடியின் அடையாளம் என அந்நாட்டு செனட்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் உயிரிழந்த குழந்தைகளின் அலறல் சத்தம் உலகின் மனசாட்சியை உலுப்பியுள்ளது. இந்த பேரழிவிலிருந்து பாகிஸ்தானைக் காப்பாற்ற உலக நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன!