மீண்டும் ஒரு பயங்கரம் : ரன்வேயில் நடுநடுங்க வைத்த ஏர் இந்தியா தீ விபத்து

மீண்டும் ஒரு பயங்கரம் : ரன்வேயில் நடுநடுங்க வைத்த ஏர் இந்தியா தீ விபத்து

கடந்த சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த கோர விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இன்னும் மீளாத நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் விபத்துகள், பெரும் பீதியைக் கிளப்பியுள்ளன! 24 மணி நேரத்திற்குள் ஏர் இந்தியாவுக்கு நேர்ந்த இரண்டு தொடர் விபத்துகள், பயணிகளிடையே மட்டுமல்லாமல், விமானப் போக்குவரத்துத் துறையினரிடையேயும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து வந்த ஏர் இந்தியா ஏர்பஸ் A321 விமானம் (AI 315), தரையிறங்கி, பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்தின் வால் பகுதியில் உள்ள Auxiliary Power Unit (APU) திடீரென தீப்பிடித்தது!

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே, தானியங்கி பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு APU அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் சுமார் 170 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, அனைவரும் எந்தப் பாதிப்புமின்றி பத்திரமாக இறங்கினர். விமானத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விமானம் மேற்கொண்டு விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட தகவல்கள், இது ஒரு பராமரிப்புப் பிரச்சனையால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறுகின்றன.

இது ஒருபுறமிருக்க, நேற்று (திங்கட்கிழமை) மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், கொச்சியிலிருந்து வந்த ஏர் இந்தியா A320 விமானம் (AI-2744), கனமழைக்கு மத்தியில் தரையிறங்கும்போது ரன்வேயிலிருந்து விலகிச் சென்றது!

ரன்வே 27-ல் இருந்து விலகி, அருகில் இருந்த புற்கள் நிறைந்த பகுதிக்குச் சென்று நின்ற இந்த விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்துச் சிதறின. மேலும், விமானத்தின் என்ஜின் பகுதியும் சேதமடைந்தது. இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, ரன்வே தற்காலிகமாக மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து மாற்று ரன்வேக்கு மாற்றப்பட்டது. பெரும் பரபரப்பு நிலவியபோதிலும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்திலும் விமானி மற்றும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கடந்த மாதம் (ஜூன் 12, 2025) அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் (AI 171) விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி, ஒரு மருத்துவ விடுதியின் மீது மோதியது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு ஐந்து வெவ்வேறு பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக ஒன்பது நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள் ஒரு கோர விபத்து, அடுத்த 24 மணி நேரத்தில் ரன்வேயில் விமானம் விலகிய விபத்து, மற்றும் தீ விபத்து என அடுத்தடுத்து நிகழ்வுகள், ஏர் இந்தியாவின் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்துப் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. பயணிகளின் உயிருடன் விளையாடுகிறதா ஏர் இந்தியா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களை ஏர் இந்தியா இன்னும் எவ்வளவு கவனமாகப் பார்க்க வேண்டும் என்பதை இந்தத் தொடர் சம்பவங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன!