லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டா நோக்கிச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே என்ஜினில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திகிலூட்டும் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மக்கள் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்!
போயிங் 767-400 ரக விமானம், LA-ன் வானில் எழும்பியபோது, அதன் இடது என்ஜினில் இருந்து தீப்பிழம்புகள் சீறிப் பாய்ந்தன. வானில் தீயுடன் வட்டமிட்ட விமானம், கரும்புகையுடன் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கே பத்திரமாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால், பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
டெல்டா ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டெல்டா விமானம் 446 புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இடது என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸுக்குத் திரும்பியது” என்று தெரிவித்தார்.