பூமி பிளந்து, நெருப்புக் கடல் கொப்பளிக்கும் திகிலூட்டும் காட்சி! ஐஸ்லாந்தில் உள்ள சுண்ட்னூக்கூர் (Sundhnúkur) எரிமலைப் பகுதியில் 2 கிலோமீட்டர் (சுமார் 1.5 மைல்) நீளப் பிளவிலிருந்து லாவா சீறிப்பாய்ந்து வருவதால், ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தில் உறைந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஐஸ்லாந்து வானிலை அலுவலகத்தின் (Icelandic Met Office – IMO) அறிக்கையின்படி, புதன்கிழமை அதிகாலையில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பின்னர், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3.56 மணியளவில் இந்த எரிமலை வெடிப்பு தொடங்கியது. ஐஸ்லாந்தின் சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அற்புதமான வான்வழிப் புகைப்படங்களில், லாவா ஒரு ‘நெருப்புச் சுவர்’ போல பிளவிலிருந்து வெளியேறி, நிலப்பரப்பை மூழ்கடிப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
இது ஐஸ்லாந்தின் ரெய்கனெஸ் தீபகற்பத்தில் (Reykjanes peninsula) உள்ள சுண்ட்னூக்கூர் எரிமலைக் குழாய் வரிசையில் ஏற்பட்ட சமீபத்திய வெடிப்பாகும். முக்கியமாக, இந்த வெடிப்பு முன்னர் சேதமடைந்த எந்த ஒரு முக்கிய உள்கட்டமைப்புக்கும் அருகில் இல்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், எரிமலையிலிருந்து வெளியேறும் வாயு மாசுபாடு காற்றின் திசைக்கு ஏற்ப மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் பரவுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. Reykjanesbær நகராட்சியில் அதிக அளவிலான வாயு மாசுபாடு பதிவாகியுள்ளது, இருப்பினும் தற்போது அது குறைந்து வருவதாக IMO தெரிவித்துள்ளது.
இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஐஸ்லாந்தில் ஏற்பட்ட பன்னிரண்டாவது எரிமலை வெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 2021 இல் இருந்து ரெய்கனெஸ் தீபகற்பத்தில் உள்ள புவியியல் அமைப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதிலிருந்து இது போன்ற தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்தோனேசியாவில் இருந்து இத்தாலி வரை, உலகெங்கிலும் உள்ள எரிமலைகள் தொடர்ந்து வெடித்து வரும் நிலையில், ஐஸ்லாந்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான எரிமலை வெடிப்பு, இயற்கையின் கோரத் தாண்டவத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் காட்சிகளை நேரலையில் காண பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.