காசாவின் டெய்ர் அல்-பாலா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவ டாங்கிகள்!

காசாவின் டெய்ர் அல்-பாலா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவ டாங்கிகள்!

காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய டாங்கிகள் நேற்று முதன்முறையாக காசாவின் டெய்ர் அல்-பாலா நகரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளன. ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் மீதமுள்ள பணயக்கைதிகள் சிலர் இந்தப் பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுவதால், இந்த முன்னேற்றம் பணயக்கைதிகளின் குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

21 மாத போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய டாங்கிகள் டெய்ர் அல்-பாலா பகுதிக்குள் தரைவழி நடவடிக்கையில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும். ஹமாஸ் பணயக்கைதிகளை இந்தப் பகுதியில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கவலையால், இஸ்ரேலிய ராணுவம் இதுவரை இந்தப் பகுதியில் தரைவழி நடவடிக்கையைத் தவிர்த்து வந்ததாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய டாங்கிகள் எட்டு வீடுகளையும் மூன்று மசூதிகளையும் தாக்கியதில் குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு எச்சரித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது. இது டஜன் கணக்கான குடும்பங்களை டெய்ர் அல்-பாலா கடலோரப் பகுதி நோக்கியும், அண்டை நகரமான கான் யூனிஸ் நோக்கியும் தப்பி ஓடச் செய்துள்ளது.

கான் யூனிஸில், இன்று முன்னதாக இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் ஒரு கூடாரத்தில் கொல்லப்பட்டதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

காசாவில் இன்னும் 50 பணயக்கைதிகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் குறைந்தது 20 பேர் உயிருடன் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. டெய்ர் அல்-பாலா மீதான தாக்குதல் தொடங்கியுள்ளதாக வந்த செய்திகள் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிப்பதாக பணயக்கைதிகள் குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய தாக்குதல் பணயக்கைதிகளுக்கு “தீவிர அச்சுறுத்தலை” ஏற்படுத்தாது என்பதை ராணுவம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கடுமையான சண்டை அதிகரிப்பது, காசாவில் ஏற்கனவே மோசமாகி வரும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, சனிக்கிழமை முதல் குறைந்தது 19 பேர் பசியால் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள் எரிபொருள், மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், வரும் நாட்களில் “பாரிய மரணங்கள்” நிகழக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மருத்துவ ஊழியர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள் என்றும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினசரி பசியால் ஏற்படும் கடுமையான சோர்வுடன் மருத்துவமனைகளுக்கு வருவதாகவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கலீல் அல்-டெக்ரான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்  ஐ.நா. உணவு உதவிக்காகக் காத்திருந்த குறைந்தது 67 பேர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக காசா மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த மோதல்கள், கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.