அமெரிக்காவின் நியூயார்க் நகரம், ஒரு பயங்கரமான வெடிப்புச் சத்தத்தால் அதிர்ந்து போயுள்ளது. மன்ஹாட்டன் நகரின் மேல்பகுதியில், வானத்தில் அடர்ந்த கருப்புப் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்தது என்ன?
நியூயார்க்கில் உள்ள அப்பர் ஈஸ்ட் சைட் (Upper East Side) பகுதியில், 7 மாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட தகவலின்படி, இந்த விபத்து ஒரு பெரிய வெடிப்புடன் தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். “முழு கட்டிடமும் குலுங்கியது. ஒரு லாரி வேகமாக வந்து மோதியது போல அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டது போல உணர்ந்தேன்,” என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.
இந்த வெடிப்பால் ஏற்பட்ட தீ, கட்டிடத்தின் கூரைக்கும், அதன் மேல் தளத்தில் உள்ள மூன்று அடுக்குமாடி வீடுகளுக்கும் பரவியது. இதனால் வானத்தில் அடர்ந்த கருப்புப் புகை பரவி, மன்ஹாட்டன் நகரமே புகை மண்டலத்தால் சூழப்பட்டதைப் போல காட்சியளித்தது.
சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள்:
- இந்த சம்பவத்தில் மூன்று தீயணைப்பு வீரர்கள் லேசான காயமடைந்தனர்.
- அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து அருகில் உள்ள கட்டிடங்களுக்குப் பரவவில்லை.
- விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
நியூயார்க் நகர அவசர மேலாண்மை அலுவலகம், அப்பகுதி மக்கள் அனைவரும் தங்கள் ஜன்னல்களை மூடிவைக்குமாறும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அந்தப் பகுதியைத் தவிர்த்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.